புதன், 18 டிசம்பர், 2013

ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாடு

ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாடு
 அரசியல்-பொருளியல் பின்னணி

அரசியல்பொருளாதார ஆய்வுக்குழு, மும்பை
தமிழில்:சாமி


நம் நாட்டின் செலுத்தல் நிலைக்கு - அதாவது, நமது ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாட்டுக்கு வரலாறு ஏதும் இல்லை என்கிற விதத்தில்  பொருளியல் துறை சார் அமைச்சகத்தார் பேசி வருகிறார்கள் ; அது விசயத்தில் மிக அண்மையில் நாம் எதிர்கொள்விருக்கிற நெருக்கடி பற்றி ஓலமிடுகிறார்கள். அதை அவர்கள் பின்வரும் பல்வேறு உடனடிக் காரணங்களால் நேர்ந்துள்ளதாகக் கதைக்கிறார்கள் :

(1) நிதிப் பற்றாக்குறைகளால் கூடுதலாக உருவானதாகச் சொல்லப்படுகிற உள்நாட்டுத்       தேவை
(2) உலக எண்ணெய்ச் சந்தையில்  உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள்
(3) உள்நாட்டுச் சந்தையில் எண்ணெய் விலைகள் குறைவது
(4) தங்கத்தின் மீது நம்மவர்க்குள்ள அவ்வளவாகப் புரிபடாத மோகம்
(5) நமது சேமிப்பாளர்களைத் தங்கத்தை நோக்கித் துரத்தும் உள்நாட்டுப் பண வீக்கம்
(6) மந்தமான உலகப் பொருளாதாரத்தால் நமது ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள சரிவு
ஆகியனவும் இன்ன பிறவும்.

            வேறு வார்த்தைகளில் கூறுவதெனில், இந்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாடு
() (உள்நாட்டுத் தேவையைக் கட்டுப்படுத்துவது, உள்நாட்டில் உற்பத்தியாகும் பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது போன்ற)  தற்போதைய கொள்கை வரம்புக்கு உட்பட்டதும்  எளிதில் தீர்க்கப்படக் கூடியதுமானதொரு சாதாரண  ‘நோய்என்பதாகவோ,
() அல்லது உலகப் பொருளாதாரம் மீட்சியுறுகையிலோ (அல்லது, எண்ணெய், தங்கம் ஆகியற்றின் உலக விலையில் நேரும் சரிவினாலோ) தன்னைத் தானே சுதாரித்துக் கொள்ளும் ஒன்றாகவோ சித்தரிக்கப்படுகிறது
இத்தகைய விளக்கங்கள், தீர்வுகள் ஆகியனவற்றின் போதாமையைக் கருதி அவற்றை ஒதுக்கித் தள்ளுகிறபோது நாம் கருத்தில் கொள்ள வேண்டியது யாதெனில், இந்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாடு காரணமான பிரச்சனைகள் இந்தியாவுக்குப் புதிதானவை அல்ல என்பதைத்தான் : அவை 1947-க்குப் பிந்தைய வரலாற்றுடன் நெருங்கிய உறவு கொண்டது. அவற்றின் ஆணி வேர் இந்த தேசத்தின் அரசியல்பொருளதாரத்தில் ஆழமாக இறங்கியுள்ளது. எந்தவொரு விந்தையையும் போலவே இது பற்றிய புரிதலும். இத் தேசத்தின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாடு காரணமான பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

 இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாடு காரணமான நெருக்கடியை ஒரு முரண்பாட்டின் வெளிப்பாடு எனலாம். உண்மையான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிற நிறுவனமயமான  தடைகளை - அதாவது ,மேலோங்கி நிற்கிற சமூக உறவுகளில் உள்ளார்ந்து இருக்கிற தடைகளை - எதிர்கொள்ளாமலேயே ஆட்சியாளர்களும் அவர்களால் தாங்கிப் பிடிக்கப்படும் வர்க்கங்களும் எப்போதும்வேகமான வளர்ச்சிக்கு ஆசைப்படுகிறார்கள். அத்தடைகளில் முதன்மையானவை மாறுபட்ட வடிவங்களில் இன்று வரை நின்று நிலவிடும் பிற்போக்குத்தனமான நிலவுடைமை உறவுகள். சமூக உறவு மாற்றத்தால் சாத்தியமாகிற நம்பகமான பொருளாயத அடிப்படை ஏதுமற்ற நிலையில் வளர்ச்சியை ஊக்குவிக்க ஆட்சியாளர்கள் முதலில் அந்நிய உதவியை நாடினார்கள். அதன் பின்னர் 1981இல் .எம்.எஃப். கடனுக்கும், வணிக நோக்கிலான அந்நியக் கடன்களுக்கும் கையேந்தினார்கள். இறுதியாக , அனைத்து விதமான அந்நிய முதலீடுகளையும் வேண்டினார்கள். திட்டமிடல் தொடங்கி முதல் முப்பதாண்டுகள் வரை அவர்களின் முயற்சிகள் அவ்வளவாகக் கை கூடவில்லை. ஆயின், உலகமயநிதி மேலாதிக்கக் கால கட்டத்தில் இந்தியாவுக்குள்  நுழைந்த அந்நிய மூலதனப் படையெடுப்பால் கொஞ்ச காலமேயெனினும் வளர்ச்சி விகிதம் வியப்பளிக்கும் விதத்தில்  அதிகரித்தது. அதே சமயம், அச்செயல்பாடு நெடுகிலும் இந்தியாவின் மீதான அந்நிய மூலதனத்தின் பிடி மென்மேலும் இறுகவே செய்தது.

காலனிய மரபு

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னர் இந்தியா தனது ஆளும் மேல்தட்டு மக்களுக்கான பூப்போன்று மெல்லிய, மிகச் சிறந்த  ஆடைகளைத் தயாரித்த பழைமை வாய்ந்த நெசவுத் தொழிலைக் கொண்டிருந்தது. அந்த ஆடைகளுக்கு வெளிச் சந்தையில்  நல்ல வாய்ப்பு இருந்ததால் ஏற்றுமதி மூலம் அவை தங்கத்துக்கும், வெள்ளிக்கும் கைமாறின. ஆங்கில ஆட்சியின் தொடக்க காலத்தில் அவர்கள் இங்கிருந்து தமது நாட்டுக்குக் காலனிய வருவாயைக் கடத்திச் செலவதற்கான வழிமுறைகளில் ஒன்றாக  இந்த ஆடைகள் ஏற்றுமதி அமைந்தது அத்தகைய காலனிய வருவாய்தான் அவர்களின் நாட்டைத் தொழில்மயமாக்கியதில் பெரும் பங்கு வகித்தது. ஆனால்அங்கே நவீன நெசவுத் தொழில் தோன்றியதும் (அதையொட்டிய) காலனியக் கொள்கை இந்தியாவின் தொழிலை நிர்மூலமாக்கியது. இந்தியா இங்கிலாந்திலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்திடும் (இழி)நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும், இந்தியாவின் இந்த முதன்மையான ஏற்றுமதித் தொழிலின் அழிவு காலனிய ஆட்சியாளர்களுக்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியது : காலனியச் சுரண்டலின் வழி கசக்கிப் பிழிந்தவற்றை அசல் வளங்களாக்கி இனித் தங்களின் தேசத்துக்கு எடுத்துச் செல்வது எவ்வாறு ? இதற்கு வசதியாக அவர்கள் இங்கு அவுரி , பருத்தி, சணல், இவையனைத்துக்கும் மேலாக(ப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சீனாவை அடிமைப்படுத்திட அதற்குள் ஊடுருவப் பயன்படுத்திய) அபினி  போன்றவற்றை உற்பத்தி செய்ய இந்திய விவசாயிகளை நெருக்கினார்கள், கந்தாயம் கட்ட ஏதுவாக இந்திய  விவசாயிகள் அப் பணப் பயிர்களைப் பயிரிட நேர்ந்தது. மேலும், இங்கே பரவிய பஞ்சம் பட்டினி பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத பரங்கியர், பெருமளவிலான உணவு தானியங்களை இங்கிருந்து ஏற்றுமதியும் செய்தார்கள்பிரிட்டிஷ் இந்தியா எப்போதும் வலிந்து திணிக்கப்பட்ட உபரி வணிகத்தைச் சுமக்க வேண்டி வந்தது. இங்கிலாந்தால் ஆளப்படுவதன் பொருட்டு இந்தியாவிடமிருந்து வசூலிக்கப்பட்டஉள்நாட்டுக் கட்டணங்கள்‘’ என்றழைக்கப்பட்ட வரியைக் கொண்டு ஆங்கிலேய அரசு இதற்கான செலவை ஈடுகட்டியது. பட்டவர்த்தனமாகச் சொல்வதெனில், (இவ்வாறு) தொடர்ந்த உபரி வணிகச் சுமை என்பது ஆங்கிலேய அரசு இந்தியாவிடமிருந்து வலுக்கட்டாயமாகக்கறந்தகப்பமே!
தமது ஆட்சியின் அந்திமக் காலத்தில், இரண்டாம் உலகப் போரினூடேயும், அதனையடுத்த சில மாதங்களிலும் பல லட்சக் கணக்கான இந்தியர்தம் உயிர்வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தமது துருப்புகளுக்கு மட்டுமின்றி குடிமக்களுக்காகவும் வேண்டி இந்தியாவிலிருந்து பொருட்களையும், சேவைகளையும்கொள்ளை’’யடித்தார்கள்.  அவ்வாறு வாரிச் சென்றவைகளுக்காக வழங்கப்படவேண்டிய அவற்றின் மதிப்பு இந்தியாவுக்கு இங்கிலாந்து தர வேண்டிய கடனாகும். அவைதாம்ஸ்டெர்லிங் இருப்புகள்எனப்பட்டன. இந்த இருப்புகள் உண்மையில் குறைத்து மதிப்பிடப்பட்டன; பிறகு அதிகார மாற்றத்துக்குச் சற்று முன்னர் (காங்கிரஸ் தலைவர்களின் சம்மதத்துடன்) அம் மதிப்பு மேலும் வெட்டிக் குறைக்கப்பட்டது. இவைதாம் 1947க்குப் பின் தொடங்கிய தனது பயணத்தின் தறுவாயில் இந்தியா வசமிருந்த அந்நியச் சொத்துகள். மேலும் காலனியக் காலத்திய அந்நிய முதலீடுகளின் வடிவிலான (அந்நியப்) பொறுப்புகளையும் அது சுமக்க நேர்ந்தது; அம்  முதலீடுகளைப் பறிமுதல் செய்திட காலனிய காலத்துக்குப் பிந்தைய அரசு விரும்பவில்லை.
வெள்ளையர் வெளியேறுகிற போது இந்தியாவின் ஏற்றுமதி என்பது கேட்பாரற்ற வேளாண் அல்லது வேளாண்மை-சார் பொருட்களே! உள்நாட்டு இயந்திரத் தொழில் வளர்ந்திராததுடன்  இறக்குமதியான தொழில்நுட்பத்தை முறையாகத் தன்வயப்படுத்திக் கொள்ளும் திறனும், மனப்பாங்கும் முன்னணி தேசியத் தொழில் முனைவோரிடம் இல்லாததொரு சூழலில் காலனியக் கொள்கையால் வடிவமைக்கப்பட்ட குறைந்த அளவிலான இந்தியாவின் பெருந்தொழில் தோற்றம் கொண்டது. இரண்டாம் உலகப் போரின்போது பெருந்தொழில்களின் இலாபம் அதிகரித்தது; ஆயின் அவை அப்போது மூலதனப் பொருட்களை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டின. ஆகவே அன்றைய சட்டகத்துள் கட்டுண்ட வேகமான வளர்ச்சிக்கான முனைப்பு என்பது ஆரம்ப நிலையிலேயே வணிகப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டதுடன் அப்பாதிப்பு தொடர்கதையாகவும் செய்தது.


வளர்ச்சிக்கான உந்துதல்கள்

            அவசரகதியில் அள்ளித் தெளித்த கோலம் போல்  அமைந்த முதல் ஐந்தாண்டுத் திட்டம்(1951-56) ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருந்த பணிகளை உள்ளடக்கி மிகச் சிறிதாக இருந்ததால் ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாட்டை அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆயின் அது பொருளாதார வளர்ச்சிக்குரிய உந்துதலைப்  போதுமான அளவுக்குத் தரவுமில்லை. பெருந்தொழில் அதிபர்கள் தமது தொழில்களின் விரைவான வளர்ச்சிக்கு ஏதுவான - ஆனால் குறைந்த லாபத்தை மட்டுமே தரக் கூடியதும் உத்தரவாதமற்றதுமான - பெரும் முதலீடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என விரும்பினர். புதிய ஆட்சியாளர்களோ தம் பங்குக்கு ஆசியாவின் ஆகப் பெரும் சக்தியாக விளங்க விரும்பினர்.
 
  இதனிடையே விடுதலைக்காகப் போரிட்ட மக்கள் புதிய அரசின் கீழான தேசிய வளர்ச்சி குறித்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்தார்கள். இந்த மக்கள் திரளின் எதிர்பார்ப்புகளை இந்தியாவுக்கு வடக்கே சீன தேசத்தில் நடந்து வந்த மாற்றங்களுடன் இணைத்து நோக்கிய புதிய ஆட்சியாளர்கள் அத்தகைய போக்குகளை இங்கே அண்டவிடாமல் தடுப்பது எப்படி எனச் சிந்திக்கலானார்கள். ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாடும், அதன் பிறகு நடந்த நாடாளுமன்றக் கூட்டமும் திட்டமிடலின் இறுதி இலக்கு சோசலிச பாணி சமூக அமைப்பைக் கொண்டதாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்தன. மேலும் பல காரணங்களின் பொருட்டு இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் முந்தையதை விடக் கூடுதலான விழைவுகளை வெளிப்படுத்தியது.

வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை

 ஆயின் வளர்ச்சிக்கு எதிரான சில தடைகளை இந்தியா எதிர்கொண்டது. அவற்றில் மிகத் தீவிரமானது அதன் நிலஉடைமை உறவு சார்ந்தது. அதே சமயம் ஏகபோக முதலாளியக் கூட்டத்தின்  வர்க்கத் தன்மையும் இதில் குறிப்பிடத்தக்க இடத்தை வகித்தது. (அவை இரண்டையும் ஒற்றை விந்தையின் அம்சங்கள் - அதாவது இந்தியாவில் நிலவிய வர்க்க ஆட்சியின் தன்மை - எனவும் கொள்ளலாம்.)

            தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பிற்போக்கான நிலஉடைமை உறவுகள் பல வழிகளில் அணை போட்டுத் தடுத்தன; சந்தை, கச்சாப் பொருள்களுக்கான மூலாதாரங்கள், தொழிலாளர் நுகர்பொருள்களின் விலைகள், சமூகப்-பொருளாதாரச் சூழல் ஆகியன அவற்றில் சில. தொழிலுக்கான பருத்தி, சணல், கரும்பு சர்க்கரை, பிற உணவுப் பொருள்கள் போன்ற  மூலப் பொருள்களை வழங்குவதில் முதன்மையானது வேளாண்மையே! எனவே வேளாண் உற்பத்தித் திறன் மீதான பாதிப்புகள் அம் மூலப்பொருள்களை நம்பியிருக்கும் தொழில்களையும் பாதிப்பவை என்பது வெள்ளிடை மலை. மேலும்தொழிலாளர் நுகர்பொருள்களின் விலைகளை அடித்து நொறுக்கி அதன் மூலம் உற்பத்தி செலவில் கூலியின் பங்கை மறைமுகமாகக் குறைப்பது என்பது முதலாளியத் தொழிலில் உபரியைப் பெருக்கிடக் கையாளும் பல  வழிமுறைகளில் முதன்மையானது. தொழிலாளர்தம் நுகர்பொருள்களில் முதன்மையானதான உணவுப் பொருளைத் தடையின்றியும், தொழிலுக்குச் சாதகமான வகையிலும் தொடர்ந்து வழங்குவதை வேளாண்மை உறுதிப்படுத்தத் தவறியது தொழிலுக்கு நேர்ந்த இன்னொரு பாதிப்பு.

எனினும், அரை-நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு ஆளான விவசாயிகளின் பயங்கரமான வறுமைதான் நிலவுடைமை சார்ந்த உறவுகளின் மீது படிந்த மாசுகளிலேயே மிக மோசமானது. அரை வயிற்றுக் கஞ்சிக்குக் கூட அல்லாடிய அவர்களின் வறுமை, தொழிற் பொருள்களுக்கான உள்நாட்டுச் சந்தையைக் குறுக்கி முடக்கியது. எனவேதான் அதிகார மாற்றம்நிகழ்ந்தவுடன் ஆட்சியாளர்கள்நிலச் சீர்திருத்தம்பற்றி நீட்டி முழக்கினார்கள்.

தொழில் வளர்ச்சிக்கு பாதகமான  நிலவுடைமை உறவுகளால் நேர்ந்த விளைவுகளில் சில கொஞ்சம் நுட்பமானவை. நிலவுடைமை சார்ந்த உறவுகளின் நிலை உற்பத்திக்கு உகந்த தொழில் முதலீடு நீங்லாகப் பிற விசயங்களில் மூலதனத்துக்குப் பல்லாற்றானும் உதவிகரமாகவே இருந்தது; அவற்றில் முக்கியமானவையாவன: உற்பத்தியில் காணப்பட்ட ஏற்ற இறக்கங்களைப் பயன்படுத்திக் கொள்ள ஊக வணிகத்துக்கு ஏற்பட்ட அரிய வாய்ப்பு, கந்து வட்டிக்குச் சாதகமான விவசாயிகளின் கையறு நிலை. இறுதியான ஆனால் அற்பமானது என ஒதுக்கித் தள்ள முடியாத விளைவு யாதெனில் சாதி அமைப்பைத் தொடரவும் அதன் வழி அன்றைய நிலைமைகளை அப்படியே தொடர்ந்திடவும் ஏதுவானவையாக  நிலவுடைமை உறவுகள் அமைந்தமைதான். பண்பாட்டின் மீது விழுந்த இப்பேரிடி செயலூக்கமிகு பல சமூக சக்திகளின் எழுச்சிக்கு மாபெரும் முட்டுக்கட்டையானது. இந்தியாவின் பெருந்தொழில்கள் ஒரு சில வணிக வகுப்பினர்தம் கட்டுப்பாட்டிலேயே பன்னெடுங் காலம் இருந்து வருவது இவ்விடத்தே நினைவுகூரத் தக்கது; அவர்களின் சாதிய அடிப்படையிலான பரந்துபட்ட தொடர்புகள் அவர்களின் முன்னேற்றத்துக்குப் பேருதவி புரிந்தது என்றாலும், பிற சமூகக் குழுக்களின் வளர்ச்சிக்கு அவை தடையாக இருந்தன. அண்மைக் காலத்தில் இதர சாதிகளைச் சேர்ந்தவர்களும் கார்ப்பரேட் உலகின் உறுப்பினர் ஆக  முடிந்துள்ளது. எனினும் அவர்களுங்கூடப் பெரும்பாலும் சாதிப் படிநிலையின் மேலடுக்கைச் சேர்ந்தவர்களே !

ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாட்டுப்           பிரச்சனைகள் வெளிப்படல்  

நிலவுடைமை உறவுகளில் தீவிரமான சீர்திருத்தம் எதையும் கடுமையாக எதிர்க்கக் கூடியவர்களாகவே புதிய ஆட்சியாளர்கள் இருந்தார்கள். வளர்ச்சிக்கான வளங்களைத் திரட்டிட இந்திய-அந்நிய ஏகபோகங்களின் சொத்துகளின் மீது கை வைக்கவும் அவர்கள் தயாரில்லை. பிறகு எதைக் கொண்டு வளர்ச்சியை முடுக்குவது? அன்று நிலவிய சமூக உறவுகளின் பின்னணியில் இதனை நோக்கிடின் அதற்கான உந்துதல் வெளியிலிருந்தே வர வேண்டியிருந்தது.
முதல் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் காணப்பட்ட   சாதகமான       ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாடு அற்ப ஆயுளைக் கண்டது. விரைந்த தொழில் முன்னேற்றத்துக்குப் பெருமளவிலான மூலதனப் பொருள்களும் அந்நியச் செலாவணியும் தேவை; (இது மட்டுமின்றி, நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாடு அதிகமான உணவுப் பொருள் இறக்குமதியாலும், தேசத்தின் மேல்தட்டு மக்களுக்கு இறக்குமதியாகும் வெளிநாட்டுப் பொருள்களின் மீதிருந்த மோகத்தாலும் கூடுதலானது.) இவ்வாறு இரண்டாம் ஐந்தாண்டுத்  திட்டம் தொடங்கி ஓராண்டு கூட முடிவதற்குள்ளேயே இந்தியா ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாட்டுப் பிரச்சனைகளில் சிக்கியது. அவற்றைச் சமாளிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் என்பவை  அந்நியச்  செலாவணி செலவுக்குக் கட்டுப்பாடு, ஐ.எம்.எஃப் வசதிகளை அதிக அளவில் நாடுவது, திட்டச் செலவுகளுக்கு அந்நிய உதவியை (இதில் பெரும் பகுதி கடன் தரும் வெளிநாட்டுக் கம்பெனிகளிடமிருந்து இறக்குமதி எனும் வடிவில்தான் இருந்தது) அதிக அளவில் சார்ந்திருப்பது  போன்ற தற்காலிக முயற்சிகளாகத்தான் இருந்தன. அப்போது இந்தியப் பொருளாதாரத்தைப் பிடித்த இந்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாட்டுப் பிரச்சனை எனும்சனியன்தொலையவே இல்லை; அவ்வப்போது நெருக்கடிகளின் வடிவில் மேலோங்குவது என்பது வழக்கமாகி விட்டது.
கடல் போல் பரந்துபட்ட சிறு உற்பத்தியாளர்களுக்கு நடுவே சிறு தீவைப் போன்று ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வணிக வகுப்பிலிருந்து தொழில் அதிபர்கள் தோன்றினார்கள்: இதுவொரு முற்றிலும் புதிதான, முதிர்ச்சியற்ற வடிவிலான ஏகபோக மூலதனத்தின் வகைபாடு எனலாம். ஒன்றுக்கொன்று தொடர்பற்ற மலைப்பூட்டுமளவு பரந்துபட்ட  பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த  இந்த தேசிய முதலாளிகள் கொள்ளை லாபம் கொழிக்கும் வணிக நடவடிக்கைகளிலும், நிதியாதாரங்களை லாவகமாகக் கையாளுவதிலும், அரசின் கொள்கையையும், நிர்வாக ஏற்பாடுகளையும் தமக்குச் சாதகமாக வளைத்துப் போடுவதிலும்   வல்லவர்கள்; கொழுத்த லாபத்துக்கு வழிவகுத்த இந்த சாகசங்களிலேயே இவர்கள் தங்களின் ஆற்றல் முழுவதையும் செலுத்தியதால் இறக்குமதியான தொழில்நுட்பத்தை உள்வாங்கி உள்ளூர்த் தொழிலை வளர்ப்பதில் அக்கறையற்றவர்கள் ஆனார்கள்.
எந்த தேசமும் ஆரம்ப கட்டத்தில் அந்நியத் தொழில்நுட்பங்களைக் குறிப்பிடத் தக்க அளவுக்கு இறக்குமதி செய்யாமல் வளர்ந்ததில்லை (எனும் உண்மையைப் புறந்தள்ளிய) இந்திய அரசு அத்தொழில்நுட்பத்தைத் தன்வயமாக்கிவளர்ச்சியை முடுக்கிவிடத் திட்டமிட்ட முயற்சி ஏதும் மேற்கொள்ளவில்லை; அத்தகைய முயற்சிக்கு ஏதுவாக இங்கிருந்த சில மத்திய ஆராய்ச்சி மையங்களைக் கொண்டு பொறியாளர்களையும், அறிவியலாளர்களையும் கொண்ட தொழில்நுட்பப் பணியாளர்தம்படையை உருவாக்கவில்லை. இவ்வாறு அது  தொழில்நுட்பத்துக்கு இடையறாத அந்நியச் சார்புநிலை என்பது தொடர்கதையாகிடவே திட்டமிட்டது. (இதற்கு மாறாக, 1960 வரை சோவியத்திடமிருந்து நிதி, தொழில்நுட்ப உதவிகளைப் பெற்று வந்த சீன தேசம் 1960களின் மத்தியில் பல துறைகளிலும் தற்சார்பை எட்டியதுடன் அந்நியக் கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்தி விட்டது.)
இந்தியா எவ்வெத் துறையிலெல்லாம் இறக்குமதிக்குப் பதிலாக உள்நாட்டு உற்பத்தியை நாடியதோ அங்கெல்லாம் நடைபெற்ற உள்நாட்டு உற்பத்தியும் இறக்குமதிளைத்தான் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று; அத்துடன் இறக்குமதியான தொழில்நுட்பங்களுக்குரிய கட்டணங்களுக்காகத் தன் கைவசமிருந்த அந்நியச் செலாவணியைக் கொட்டியழ வேண்டி வந்தது. இது மேலைநாட்டு நுகர்பொருட்களின் மீது மோகங் கொண்ட மேல்தட்டு மக்களின் தேவைகளை நிறைவு செய்திட மேற்கொண்ட இறக்குமதிகளின் விசயத்தில் இன்னும் கூடுதலாக இருந்தது. இத்தகைய நேர்வுகளில் ஒரு பொருளின் கவர்ச்சி என்பது அது இறக்குமதியானதாகவோ அல்லது இறக்குமதியான உதிரி பாகங்களைக் கொண்டு இங்கேயே தொகுக்கப்பட்டதாகவோ இருப்பதில் அடங்கியது.(இப்போக்கு நுகர்வு, உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றின்போற்றத் தக்கஅம்சமாக நிலபெற்று விட்டது; இதனை இன்று இந்திய மேல்தட்டு மக்கள்  தங்களின் தலை மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் .)
வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக நிற்கும் நில முதலைகள் , ஏகபோக தொழில் அதிபர்கள் ஆகியோரைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்த்து, வேறெந்த வழியானாலும் அதைக் கடைபிடித்திட  ஆட்சியாளர்கள் விரும்பியதால் அந்நியத் தனியார் முதலீடுகூட ஊக்குவிக்கப்பட்டது  இந்தியரின் நிறுவனங்களை விட அந்நியரிடமிருந்த தொழில்துறைகள் நன்கு செழித்தனஆயின் அந்நிய வரவால் இங்கே மூலதனச் செறிவு அவ்வளவாக நிகழவில்லை. மாறாக இங்கே கிடைத்த லாபத்தைக் கொண்டே அந்த   அந்நிய நிறுவனங்கள் ஊதிப் பெருத்தன என்பதுதான் நிதர்சனமான உண்மை. அத்துடன் அவை நிகர இறக்குமதி மதிப்பு, உரிமத் தொகை, தொழில்நுட்பக் கட்டணங்கள், பங்குத் தொகைகள், நிர்வாகிகளின் ஊதியம் என எண்ணற்ற தலைப்புகளிலும் ஏராளமான பணத்தை இங்கிருந்து அள்ளிச் சென்றன.
அதிகார மாற்றம் நிகழ்வதற்கு முன்னரே  இந்திய ஆட்சியாளர்கள்வல்லரசுகுறித்த கனவில் மிதந்தார்கள் : இதற்கு அடிப்படையான பொருளாதார வலிமையையோ அல்லது சமூகக் கட்டுக்கோப்பையோ அவர்கள் நம்பவில்லை; இங்குள்ள மக்கள் தொகையும் பரந்து விரிந்த நிலப் பரப்புமே போதுமானவை என அவர்கள்  ஒருவேளை கருதியிருக்கலாம்? ஆட்டம் காணும் இந்த அடித்தளத்துக்கும் அவர்களின் அளவுக்கு மீறீய ஆசைக்கும் இடையிலான முரண் அவர்கள் 1962இல்  நடத்திய இந்திய-சீன எல்லைப் போரின் பேரழிவில் வெட்ட வெளிச்சமாகியதுஇத் தோல்வியால்அடிபட்ட புலியாய்த் தங்களை வரித்துக் கொண்ட அவர்கள் மென்மேலும் அதிகமான ஆயுத இறக்குமதியில் இறங்கினார்கள்; இதனால் அந்நியச் செலாவணி கரையும் வேகம் இன்னும் கூடியது. இது குறித்து விவாதிப்பதேபெரும் தேசத் துரோகம்எனக் கருதப்பட்டது. ஓர் எழுத்தாளர் குறிப்பிட்டது போல்பெரும்பான்மை அரசியல்-சமூகக் குழுக்களின் நலன்களுக்கு உகந்ததாகவளர்ச்சிஇருக்குமாயின் இதற்கு முன் இருப்பதாய்ப் புலப்படாத பணத்தைப் பெருமளவில் திரட்டுவது என்பது அரசாங்கத்துக்கு மிக எளிதான காரியமாகும். 1960-61க்கும் 1963-64க்கும் இடைப்பட்ட காலத்தில் பாதுகாப்பு பட்ஜெட்டை 5250 கோடிக்கு அதிகரிக்க அரசாங்கத்தால் முடிந்தது. இது பொதுத்துறையிலும் தனியார் துறையிலும் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீடுகளில்  இதுகாறும் அறிந்திராத உயர்வு…….”[1] .


அறுபதுகளின் மத்தியில் ஏற்பட்ட முட்டுக்கட்டை
 
திட்டங்களின் முதலீட்டில் அந்நிய உதவியின் பங்கு மென்மேலும் அதிகரித்து வந்த போதும் பெரு முதலாளிகள் விரும்பியவாறு வளர்ச்சியின் வேகம் இருக்கவில்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புஇந்து வளர்ச்சி விகிதம்எனப் பரிகசிக்கப்பட்ட 3.5 விழுக்காட்டைத் தாண்டவில்லை. எளிய மக்கள் எதிர்பார்த்த தேசிய வளர்ச்சியையும் திட்டங்களால் எட்ட இயலவில்லை.
ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுத்த வளர்ச்சிப் பாதையின் போதாமையும் இயலாமையும் அறுபதுகளின் மத்தியில் அம்பலமானது. 1965, 1966 ஆகிய ஈராண்டுகளில் ஏற்பட்ட கடும் வறட்சியால் உணவு உற்பதி பெரும் வீழ்ச்சி கண்டது. மக்களின் குறைந்த பட்ச அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் வண்ணம் உணவுப் பொருள்கள் விநியோகத்தை நன்கு திட்டமிட்டு கட்டுப்படுத்துவதைத் தவிர்த்து அமெரிக்காவிலிருந்து பொதுச் சட்டம் 480இன் கீழ்ப் பெருமளவில் அவற்றை இறக்குமதி செய்தது. (இதனால் அமெரிக்கா இந்தியாவின் அயலுறவுக் கொள்கையைத் தான் விரும்பிய திசையில் கூச்ச நாச்சமின்றி செலுத்திட முடிந்தது  என்பது நாம் நன்கறிந்த ஒன்று). எனினும் இந்த உணவுப் பொருள் இறக்குமதி மக்கள் சந்தித்த உணவு நெருக்கடியைத் தடுக்கவில்லை.
அறுபதுகளின் மத்தியில் ஏற்பட்ட நெருக்கடியின் இன்னோர் உட்கூறுதான் ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாடு. வணிகப் பற்றாக்குறை மென்மேலும் மிகையாகி வந்த போதே (அந்நிய) முதலீடுகளின் வரத்தும்  குறைந்து வந்தது.(1965இல் பாகிஸ்தானுடன் நேர்ந்த மோதல் இதை மேலும் கூர்மைப்படுத்தியது.) அந்நியச் செலாவணி அருகி வருவதைக் கண்ட அரசு 1966இல் இந்திய ரூபாயின் மதிப்பை 36.5 விழுக்காடு குறைத்தது. இக்காலகட்டம் தொழில் மந்தத்தையும், தொழிலாளர்தம் போராட்டங்களையும் மட்டுமின்றி விவசாயிகளின் மாபெரும் எழுச்சியையும் கண்டது. அதுகாறும் கேட்பாரற்று கோலோச்சிய  காங்கிரஸ் கட்சியின் ஏகபோக அரசியல் ஆதிக்கம் ஆட்டம் காணத் தொடங்கியது. இப் பின்னணியில் இந்தியப் பொருளாதாரம் சந்தித்து வரும் நீடித்த தொழில் மந்தம் அல்லது அமைப்புப் பாங்கிலான பின்னடைவு பற்றி ஏராளமான  ஆய்வுகள் 1960இன் பிற்பகுதி முதல் 1980இன் முற்பகுதி வரை மேற்கொள்ளப்பட்டன; அவற்றில் பல, வேளாண் துறையில் ஏற்பட்ட தேக்கத்தில் அதற்கான காரணங்களைக் கண்டன. வேளாண்மை உறவுகளில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்தாமல் அந்த நெருக்கடியிலிருந்து மீளமுடியாது என மீண்டுமொரு முறை அடித்துச் சொல்லின.


முன்னோக்கிய உந்துகை

எனினும், ஆட்சியாளர்கள் இப்பிரச்சனைகளைத் தமது வர்க்கக் கோணத்திலிருந்தே நோக்கினார்கள். சமூகப்-பொருளாதார நிறுவனங்களில் ஒரு மாற்றத்தைத் தருவிக்கமுகத்தான் அதற்குத் தடைக்கல்லாக நிற்கும் நில உடைமை உறவுகளை அடியோடு தகர்ப்பதை விடுத்து, 1960களின் மத்தியில் ஒரு தொழில்நுட்பத் தீர்வைக் கண்டுபிடித்தார்கள். அது இதுதான் : ஒப்பீட்டளவில் நாட்டின் வளமிக்க சில பகுதிகளில் உள்ள ’வாய்ப்பு மிக்க‘ விவசாயிக்கு விலைமிகு இடுபொருள்களைக் கோரும் - அதிகச் செலவு பிடிக்கும் - ஒரு சில உயர்விளைச்சல் இரகங்களைப் பயிரிடத் தேவையான கால்வாய்ப் பாசன வசதி , மின் வசதி, மானிய விலையில் இரசாயன உரம், வங்கிக் கடன் வசதி ஆகியவற்றை அளிப்பதுடன் விளைபொருளைக் கட்டுப்படியான விலையில் கொள்முதலும் செய்தல்; இப்பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் உபரி விளைபொருட்களைக் கொண்டு தேசத்தின் உணவுத் தேவையை நிறைவு செய்வது மட்டுமே அவர்களின் திட்டம். இதர விவசாயம் அதன் சொந்த ஏற்பாட்டை நம்பியிருத்தல் வேண்டும். அரசுக்கு அதில் எவ்விதப் பொறுப்பும் இல்லை. இந்தத் திசை மாற்றம் நிலச் சீர்திருத்தம் பற்றிய கபட வேடத்தை ஒரேயடியாகக் கலைத்துப் போட்டது. ’பசுமைப் புரட்சி’ உணவுப் பொருள் இறக்குமதியைத் தற்காலிகமாகக்  கைவிட வாய்ப்பளித்த அதே பொழுதில் - [ நபருக்கான உணவு விகிதம் குறைக்கப்பட்டதன் காரணமாகவும் இது சாத்தியமானது ] - இரசாயன உரம், உர உற்பத்திக்கான தொழில்நுட்பம், வேளாண் இயந்திரங்கள்/கருவிகள், பூச்சி மருந்துகள், டீசல் ஆகியனவற்றில்   இறக்குமதியின் பங்கு வெகுவாகக் கூடுவதற்கும், தொடர்வதற்கும் காரணமானது. காலப் போக்கில் உற்பத்தியின் வளர்ச்சி மந்தமானது; ஆனால் விவசாயியின் முதுகில் ஏற்றப்பட்ட சுமையோ கூடிக் கொண்டே போனது .
1980களில், குறிப்பாக பிற்பகுதியில் தொழில் மந்தத்தையும் இதே போன்றுதான் இந்த ஆட்சியாளர்கள் அணுகினார்கள். தேசியத் தொழிலை ’வலுப்படுத்தவும்’, ’போட்டியைச் சமாளிக்கும் திறனுடையதாக்கவும்’, அதன் வழி ஏற்றுமதியை ஊக்குவிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு வகுக்கப்பட்ட புதிய கொள்கை தொழில் உரிமங்களை எளிதாக்கியது; இறக்குமதி, அன்னியக் கூட்டுகளின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது; தொழிலாளிகளை வெளியேற்றவே இப் புதிய வாய்ப்பைத் தொழிலதிபர்கள் பயன்படுத்தினர். எனினும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது உலகளாவிய சந்தைகளில் நுழைய முயன்ற மூன்றாம் உலக நாடுகளின் நிறுவனங்களிடமிருந்து அவற்றைப் பாதுகாப்பதில் மிகுந்த விழிப்புடன் இருந்தனர். இந்தியத் தொழில்களுடன் அன்னியக் கம்பெனிகளுடனான கூட்டு குறித்த ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களின் ஏற்றுமதி மீது பொதுவாக வெளிப்படையான அல்லது மறைமுகமான கட்டுப்பாடுகளைச் செலுத்தும் விதிகளைக் கொண்டவையாகவே இருந்தன. ஆகவே அப்புதிய கொள்கை இந்திய ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அன்னிய நாட்டு மூலதனப் பொருட்கள் அளவின்றி உள்ளே   வரவே வழி வகுத்தது. 
உள்நாட்டுச் சந்தை குறித்த அடிப்படையான கேள்வி அந்தரத்திலேயே தொங்கியது. வெகு மக்களிடம்  போதிய வாங்கும் சக்தி இன்மை காரணமாக, அவர்களின் சந்தை ஆளரவம் அற்றுக் கிடந்தது. ஆதலால் 1980களில் ஆட்சியாளர்கள் இதற்குக் கண்ட தீர்வு யாதெனில், ’வாய்ப்புள்ள நுகர்வோரை’, அதாவது சமூகத்தின் மேல்தட்டைச் சார்ந்தோரை நோக்கிய நுகர்வுப் பண்டங்களின் உற்பத்தியும், இறக்குமதியும் என்பதே!  இந்த ‘ உயர்ந்தோர் கூட்டத்தின் நுகர்வில் வெகுமக்களுக்கான நுகர்வுப் பொருட்களுக்கு அவ்வளவாக இடமில்லை என்பதால் அவற்றின் உற்பத்தி மிகவும் குறைவே; ஆயின்  ஆடம்பரப் பொருட்களின் உற்பத்தி விரைவாகக் கூடியது. இவ்வகைப்பட்ட உள்நாட்டு உற்பத்தியுங்கூட (வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியான)   உதிரி பாகங்களை ஒட்டுப் போடுவது‘—அதாவது, உதிரிபாகங்களைத் திருப்புளி போன்ற கருவிகளைக் கொண்டு முறுக்கியும், திருப்பியும் ஒன்று சேர்ப்பது-- என்ற வகையிலான ’திருப்புளித் தொழில்நுட்பமாகவே’ அமைந்தது.  இந்த மேல்தட்டின் ரசனை ஏகாதிபத்திய நாடுகளின் விளம்பர நிறுவனங்களால் தீர்மானிக்கப்பட்டதால் அதற்கேற்றவாறான பொருட்களும் தொழில்நுட்பமும் அந்த நாடுகளிலிருந்தே இறக்குமதியாயின.


புதியஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாட்டுப்         பிரச்சனை ; 1991 ஆம் ஆண்டின் ’அமைப்புச்  சீர்திருத்தம்

இப்புதிய செயல்திட்டத்தால் இத்தகைய   பொருளுற்பத்தியின் வளர்ச்சி விகிதங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வெகுவேகமாக இருந்தன; ஆயின் மேற்சொன்ன காரணங்களால் அவற்றை அடைவதற்கான அந்நியச் செலாவணியின் பயன்பாடும் பெருமளவுக்கு அதிகமாயிற்று. இப்புதிய சூழ்நிலை முன்பு போலன்றி இப்போது  இந்த அந்நியச் செலாவணி சந்தையை அகலத் திறந்துவிட்டது; அது, முதலில் 1981ஆம் ஆண்டின் பன்னாட்டுப் பண நிதியத்தின் [IMF] கடன் எனும் வடிவத்திலும் பின்னர் வணிக வீதத்திலான அந்நியக் கடன்கள் எனும் வடிவிலும் அமைந்தது. எண்ணெய் வள நாடுகளால் தங்களிடம் இட்டு வைக்கப்பட்ட ‘ பெட்ரோ-டாலர்’களை  யாருடைய தலைமீதேனும் ஏற்றி விட வேண்டும் என அலைந்துகொண்டிருந்த அந்நிய வங்கிகளின் வட்டி ஆசைதான் வணிக வீதத்திலான அந்நியக் கடன்கள் ஏற்பட்டதற்கான காரணம். இச்செயல் திட்டத்தின் இறுதி விளைவு யாதெனில் இந்தியாவின் அந்நியக் கடன் இரு மடங்கானது; அந்நியச் செலாவணி நெருக்கடி ஆழமானது. இது இந்தியாவை மீண்டும், அதாவது 1991இல் ‘அமைப்புச் சீர்திருத்தத்துக்கான கடன்’ வேண்டி அதே பன்னாட்டுப் பண நிதியத்தின் [IMF] காலடியில் விழ வைத்தது.
         1990களின் முற்பாதியில் நடைமுறைக்கு வந்த ‘அமைப்புச் சீர்திருத்தம்‘ என்பது இந்தியாவை உலகச் சந்தையில் சிறந்த போட்டியாளனாக ஆக்கி ’தீராத் தலைவலி’யாய்த் தொடரும் ஏற்றுமதி இறக்குமதி மதிப்புகளுக்கு இடையிலான மிகை வேறுபாட்டுப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் என மீண்டும் ஒரு முறை நம்பப்பட்டது; ஒரு சில ஆண்டுகள் வணிகப் பற்றாக்குறை குறையத்தான் செய்தது; ஆயின், பொதுவாகத் தொழிலுற்பத்தி, குறிப்பாக இறக்குமதியை அடிப்படையாகக் கொண்ட தொழில் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக 1990களின் மத்தியில் அந்தப் ’பாம்பு’ மீண்டும் படமெடுத்து ஆடத் தொடங்கிவிட்டது. அந்த திடீர் வளர்ச்சி வெகு சீக்கிரத்திலேயே சரியத் தொடங்கியது; 2000ங்களின் தொடக்கத்தில் காணப்பட்ட  மொத்த உள்நாட்டு உற்பதி, தொழிலுற்பத்தி ஆகியனவற்றின் [ 1991க்குப் பிந்தைய காலத்து ] வளர்ச்சி விகிதங்கள் 1980களில் எய்தியதை விட எவ்விதத்திலும் உயர்வானவையாக இல்லை.


வளர்ச்சியும் நெருக்கடியும்

2003க்குப் பிந்தைய காலத்தில் அந்நிய மூலதனத்தின் அதிரடி வருகை அதிவேக வளர்ச்சியை முடுக்கி விட்டது. அது நுகர்வோர்க் கடனை ஊக்குவித்து ஆடம்பரப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்தது; இப்போது ஊக்கமடைந்த பெருந்தொழில் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்யத் தொடங்கின. ( எனினும், இந்த வளர்ச்சி 1947க்குப் பிந்தைய இந்தியாவின் தேசிய வருமானத்திலும், வேலைவாய்ப்பிலும் தொழிலின் பங்களிப்பை அவ்வளவாக மாற்றிடவில்லை; சேவைத் துறையில் மட்டும் கோணல்மாணலான  வளர்ச்சி கிட்டியுள்ளது.) இந்த அந்நிய முதலீடுகள் என்பவை பெரும்பாலும் ஒப்பீட்டளவில் கட்டுதிட்டங்களுக்கு உட்படாத உலகளாவிய நிதி மூலதன வருகையின் விளைவே! இப்போது அந்நிய நிதி முதலீட்டாளர்கள் இந்தியாவின் பெருந்தொழில்கள் பலவற்றிலும் அவற்றின் (ஆரம்ப கால) ஊக்குவிப்பாளர்களை விடவும் கூடுதலான பங்குகளை வாங்கிக் குவித்தனர். அந்நிய நேரடி முதலீட்டின் நடப்பு சந்தை மதிப்பு குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் அதிகாரபூர்வமாக  வெளியிடப்படவில்லை; ஆயினும் அவையுங்கூடப் பெருமளவுக்கு உயர்ந்துள்ளன என்பது ஊரறிந்த உண்மை. இந்த  அந்நிய நேரடி முதலீட்டுக்குப் பல்வகையான துறைகள் மென்மேலும் திறந்து விடப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இது இந்தியச் சொத்துகளும் , இந்தியப் பொருளாதாரத்தின் எண்ணற்ற துறைகளும் அந்நியர் கைவசமாகிட வழி வகுக்கிறது இதன் விளைவுகள் மிகவும் விபரீதமாக இருக்கப் போகின்றன. சான்றாக, பல்பொருள் சில்லறை விற்பனைச் சந்தையை அந்நியருக்கு அகலத் திறந்துவிடுவதால் மூன்று கட்ட நெருக்கடி முற்றப் போகிறது : சிறு வணிகரை மட்டுமன்றி, சிறு உற்பத்தியாளர்களையும் பாதிக்கும். அது அத்துடன் நிற்காமல்  நுகர்வோர் நலனையும் நாசமாக்கும்.
அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்கள் ( வணிகப் பொருட்களின் ) தவறான விலை நிர்ணயத்தின் வாயிலாக நமது மூலதனம் நன்கு திட்டமிட்ட வகையில் அந்நியர் கைக்கு மாற்றப்பட்டு வருவதைத் தடுக்கும் ஆற்றலோ விருப்பமோ அற்றவையாகவே காட்சியளிக்கின்றன. இவ்வகையில் இங்கிருந்து ‘களவாடப்பட்ட’ மூலதனத்தின் மதிப்பை நம்மால் ஊகிக்கத்தான் முடியும். அதாவது கறாராக அறுதியிட முடியாது :  ‘குளோபல் ஃபினான்ஷியல் இன்டெக்ரிட்டி ‘ [ GFI ]  எனும் அமைப்பின் கணக்குப்படி 1948-2008 கால கட்டத்தில் இந்தியாவிலிருந்து ’கடத்திச் செல்லப்பட்ட’ மூலதனத்தின் மதிப்பு 213 பில்லியன் டாலர் (அதாவது 21300 கோடி டாலர்) ஆகும். இம் மதிப்பீடு மிக மிகக் குறைவானதாகும். அமெரிக்கக் கருவூலத்தால் வழங்கப்படும் வட்டி வீதத்தில் கணக்கிட்டால் ( நமது இட்டு வைப்பாகக் கருதப்பட வேண்டிய) இத்தொகை இரட்டிப்பாகி இன்று 462 பில்லியன் (அதாவது 46200 கோடி) டாலர் ஆகியிருக்கும். இது இந்தியாவின் அவ்வாண்டுக்கான அந்நியக் கடனைப் போல் இரு மடங்காகும். அந் நிறுவனத்தின் கணக்கீடுகளின்படி இம் மூலதன வெளியேற்றத்தில் 2/3 பங்கு (அதாவது 66%) 1991க்குப் பிந்தைய தாராளமயக் காலத்தில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இக் கால கட்டத்தில் உயர் நிகர வருமான வட்டத்தைச் சேர்ந்தோரின் சொத்துக் குவிப்பின் அளவுக்கும், சட்ட விரோத கணக்குப் பரிமாற்றங்களின் மதிப்புக்கும் இடையிலான புள்ளிவிவர ஒட்டுறவைக் கண்ணுற்ற பிறகே அந்நிறுவனம் அவ்வாறு கூறியுள்ளது. கட்டுப்பாடுகள் தளர்வும், தாராள வணிகமும்தான் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குக்  கணக்குப் பரிமாற்றங்கள் நடைபெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தன.(2)
இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான பொருட்கள் சேவைகள் ஆகியனற்றின் மதிப்புகளில் ஒளிந்திருப்பன எவையெனில் அவை அசல்-அதாவது உண்மையான-ஆதார வளங்களின் மாறுதல்களே! மக்டோஃப் அவர்கள் கூறுவதுபோல், உலக நாடுகளுக்கு இடையிலான வணிகத்தில் புழங்கும் விலைகளும், அவ்விலைகளின் கூறுகளான செலவினங்களும் “சமூக அமைப்பினால் தீர்மானமாகிறவையே; மேலும், அவை அந்த அமைப்பின் அன்றைய மற்றும் கடந்த காலத்திய உறைந்துபோன அதிகாரம் அல்லது செல்வாக்கு சார்ந்த உறவுகளாலும் நிர்ணயமாகின்றன.“(3) இந்திய  வணிகப் பொருட்களின் மொத்த ஏற்றுமதியில் 1990இல் 1/3 (அல்லது33%) ஆக இருந்த, குறைந்த அளவில் மதிப்புக்கூட்டப்பட்டதும், ‘ஆதார வளத்தின் பேரிலானதுமான ஏற்றுமதிகளின் பங்கு, 2008இல் பாதியாக அல்லது 50 % ஆக உயர்ந்தது.(4)     [இந்த ஏற்றுமதிகளில் பெரும்பகுதியானவை இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட அரிய [இயற்கை கனிம] வளங்களே! மேலும், அவை அவ்வப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நலன்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் வெட்டி  எடுக்கப்பட்டவை.] வேளாண்மையில் நெருக்கடியும் தொழிலக வேலைவாய்ப்பில் தேக்கமும் ஒன்றிணைந்து இந்தியத் தொழிலாளர்களை இங்கிருந்து வெளிநாடுகளுக்கு விரட்டியடித்ததால் அவர்கள் அங்கே அத்தக் கூலிக்குத் தொடர்ச்சியாக அகப்பட்டார்கள். அவர்களின் கூலி என்பது இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளுக்கு இடையிலான வேறுபாட்டில் அடங்கிய ‘தனியரின்  [பண] மாறுதல்கள்‘ எனலாம். இந்திய மென்பொருள் ஏற்றுமதி இங்குள்ள மென்பொருள் தொழிலாளர்தம் கூலிக்கும் வளர்ந்த நாடுகளைச் சேர்ந்தோரின் கூலிக்கும் இடையிலான வேறுபாட்டின் அடிப்படையில் அமைந்தது . இந்த வேறுபாட்டின் பின்னால் இந்த மென்பொருள் தொழிலாளர்களுக்கான நுகர்பொருட்களை உற்பத்தி செய்கிற, அவர்களுக்குரிய சேவைகளை அளிக்கிற பிற தொழிலாளர்களின் குறைவான கூலி மறைந்துள்ளது. இந்த [பிற தொழிலாளர்களின்] குறைவான கூலியைக்  கோணலான[பொருளாதார] வளர்ச்சி வகைமுறை உறுதிப்படுத்துகிறது. பொது (அல்லது அரசு ) முதலீட்டைக் கொண்டு கட்டப்பட்ட இந்தியக் கல்வி அமைப்பு  குறைந்த செலவில் பயிலும் ஏராளமான மென்பொருள் பொறியாளர்களைத் தடங்கலின்றி தொடர்ச்சியாக உருவாக்கிடுவதன் மூலம் ’மானிய விலை’யில் மென்பொருள் ஏற்றுமதிக்கு வசதி செய்து கொடுக்கிறது. இது, இந்தியாவின் மிகப் பெரிய இயந்திரத் தொழில் நிறுவனமான எல்&டி.யின் [L&T] தலைவர் எல்லாப் பொறியாளர்களையும் மென்பொருள் ஏற்றுமதித் தொழிலே ’அள்ளிக் கொண்டு ‘ போய்விட்டது எனப் ‘புலம்பிடும்’ அளவுக்குப் போய்விட்டது. [ நமது ஏற்றுமதிஇறக்குமதி ஆகியவற்றின் மதிப்புகளுக்கு இடையிலான வேறுபாட்டில் கொஞ்சமும் இடம்பெற்றிடாத இன்னொரு மிகப் பெரிய ஆதார வள மாறுதல்(அல்லது ஏற்றுமதி) யாதெனில் அது பொது (அல்லது அரசு ) நிதியுதவியால் இயங்கி வரும்  இந்திய மேலாண்மைப் பள்ளிகளிலிருந்தும், அரசு--சார் கல்வி நிறுவனங்களிலிருந்தும்  வெளிவரும் மிகச் சிறந்த  (அறிவியல்-தொழில் நுட்பப்) பட்டதாரிகளைத் தமது தேர்ந்த குடியேற்றக் கொள்கை வழி அமெரிக்க மற்றும் பிற ஏகாதிபத்திய நாடுகள் திட்டமிட்ட வகையில் கவர்ந்து கொண்டு போவதுதான். இவ்வளவும் போதாதென்று ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஏராளமான மானியங்களைத் தாராளமாக அள்ளிக் கொடுக்கிறது இந்திய அரசு. அதன் மிக அண்மையச் சான்றுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.
    2003-08ஆம் ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி அதே வீச்சில், சொல்லப் போனால் அதை விடவும் கடும் வேகத்தில் இறக்குமதி அளவை அதிகரித்தது  எனில் அது மிகையன்று. அண்மைய ஆண்டுகளில் ஏற்றுமதியின் வளர்ச்சி இறங்குமுகமாக—எதிர்மறையாக என்று கூடச் சொல்லுமளவுக்கு—வீழ்ச்சி கண்டபோதும் இறக்குமதியின் வளர்ச்சி ஏறுமுகமாகவே தொடர்கிறது. என்றும் குன்றா வளர்ச்சி காணும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை , என்றுமில்லாத அளவுக்கு (அந்நிய நேரடி முதலீடு, அந்நிய நிறுவனங்களின் முதலீடு, அந்நியக் கடன் ஆகியனவற்றை உள்ளடக்கிய) அதிகப்படியான மூலதன வரவுகளைக் கொண்டு சமாளிக்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் அந்நியப் பொறுப்புகளை மேலும் கூட்டுகிறது. இப்பொறுப்புகளைச் சமாளிப்பதற்கான செலவுகளும் பெருமளவு கூடிவிட்டன. வேடிக்கை என்னவெனில் 2008க்குப் பின்னுள்ள காலத்திய (பொருளாதாரச்) சுணக்கம் கூட இந்த இறக்குமதி வேகத்தை பாதிக்கவில்லை; இதன் பொருள் யாதெனில் இந்த இறக்குமதிகளுக்குக் காரணமான சமூகப் பகுதிகள் இந்த சுணக்கத்தால் தமது வேலைகளையோ, செலவழிக்கும் திறனையோ இழந்தவை அல்ல என்பதுதான்.
இந்த சுணக்கம் என்பது நாம் ஏற்கெனவே எதிலிருந்து தொடங்கினோமோ அந்த சிக்கலின்--–அதாவது, ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி ’மோக’த்துக்கும் அதற்குத் தடையாக  உள்ள அதன் வலுவற்ற அடித்தளத்துக்கும் இடையிலான முரண்பாட்டின் வெளிப்பாடே !  அதன் இன்னொரு வெளிப்பாடுதான் கடந்த பத்தாண்டில் பகாசுர மூலதன இறக்குமதிகளின் மூலம் சமாளிக்க நேர்ந்த  வணிக, நடப்புக் கணக்குப் பற்றாக்குறைகளின் அளவற்ற பெருக்கம்.  ‘இந்தியப் பொருளாதாரம் பற்றிய நோக்குகள்’ எனும் இதழின் பிறிதோர் வெளியீட்டில் சுட்டப்பட்டவாறு, கடந்த இருபதாண்டுகளாகக் ’கண்மண் தெரியாத’ வேகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாராளமய—உலகமய நடவடிக்கைகளின் தவிர்க்கவியலாத விளைவு யாதெனில் ஆழமான அந்நிய மூலதனச் சார்பு, அதிக அளவிலான இந்தியச் சொத்துகள் அந்நியருக்குக் கைமாறியமை, இந்தியப் பொருளாதாரத்தின் மீதான அந்நியப் பிடியின் அதிகமான இறுக்கம் ஆகியனவே !